திருக்குருகூர் (ஆழ்வார்திருநகரி) ஆலயம் சென்றால் நாகதோஷங்கள் நீங்கும்
திருப்பதிசாரம் என்ற ஊரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவாழ்மார்பன் ஆலயம் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் அருகில் உடையநங்கை என்ற விஷ்ணு பக்தை வாழ்ந்து வந்தாள். இதே போல் திருநெல்வேலி அருகில் உள்ள ஆழ்வார்திருநகரி (திருக்குருகூர்) என்ற ஊரில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஆதிநாதர் கோவிலுக்கு அருகில் காரி என்ற விஷ்ணு பக்தன் வசித்து வந்தான். காரிக்கும் உடைய நங்கைக்கும் திருமணம் நடைபெற்றது.
நம்மாழ்வார் அவதாரம் – திருப்பதிசாரத்தில் மகாவிஷ்ணு அருளால் அந்தத் தம்பதிக்கு நம்மாழ்வார் அவதரித்தார். பிறந்தவுடன் அழாமல் தாய் அமுது உண்ணாமல் மவுனத்தோடு இருந்தார் நம்மாழ்வார். கொஞ்சம் பயந்து போன அவரது பெற்றோர் திருக்குருகூரில் உள்ள ஆதிப்பிரான் சன்னிதியில் நம்மாழ்வாரை விட்டனர். அந்தக் குழந்தை தவழ்ந்து சென்று அங்கிருந்து புளியமரப் பொந்தில் புகுந்து யோக முத்திரையுடன் பத்மாசன யோகத்தில் அமர்ந்து விட்டது. தொடர்ச்சியாக பதினாறு ஆண்டுகள் திருக்குருகூர் தல மரமான புளிய மரத்திலேயே நம்மாழ்வார் தவ நிலையில் இருந்தார். பின்பு வேதத்தின் சாரத்தை திருவாய் மொழியாக மொழிய அதனை திருக்கோளூரில் ஆழ்வார் நவ திருப்பதியில் பிறந்த மதுரகவியாழ்வார் ஏட்டில் எழுதினார்.
திவ்ய தேச பெருமாள்கள் – பல திவ்ய தேச தலங்களிலும் எழுந்தருளியுள்ள எம்பெருமாள்கள் திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரில் உள்ள ஆதிநாத சுவாமி ஆலய புளியமரத்தின் இலைகளிலும் கிளைகளிலும் வீற்றிருப்பதாக ஐதீகம். அவ்வாறு இருக்கும் பெருமாள்கள் நம்மாழ்வாரிடம் எம்மைப் பாடுக! எம்மைப் பாடுக! என்று கேட்டதாக கூறப்படுகிறது. நம்மாழ்வாரும் எந்த திவ்ய தேசத்திற்கும் நேரில் செல்லாது புளியமரத்தின் பொந்தில் இருந்து கொண்டே திவ்ய தேச ஸ்தலங்களுக்கு பாசுரம் பாடி அருளினார். நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தை தொகுதி நாதமுனிகளுக்கு நம்மாழ்வாரே பிரத்யட்சமாகி நாலாயிரம் பாக்களையும் அருள நாதமுனிகள் அவற்றை ஏட்டில் எழுதித் தொகுத்தார் என்பார்கள். கம்பர் ராமாயணத்தை ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றும்போது சடகோபனைப் (சடகோபன்- நம்மாழ்வார்) பாடினாயோ? என்று கேட்டாராம் பெருமாள். கம்பர் உடனடியாக நம்மாழ்வாரைப் போற்றி சடகோபரந்தாதி பாடினார்.
பெரிய விமானம் – இத்தல புளியமரத்தில் பெருமாள் பிரம்மச்சரிய யோகத்தில் இருப்பதால் மகாலட்சுமியை மகிழ மாலையாக ஏற்றுக்கொண்டாராம் மகாவிஷ்ணு. ஆழ்வார் திருநகரிக்கு வந்த ராமானுஜர் இதுவோ திருநகரி ஈதோ பொருநை இதுவோ பரம பதத்து எல்லை என்கிறார். ஆம்! ஆழ்வார் திருநகரியை பரமபதத்து எல்லை என்கிறார் ராமானுஜர். இத்தலத்தில் நம்மாழ்வார் சன்னிதியும் மூலவர் ஆதிநாதன் சன்னிதியில் தனித்தனியே உள்ளன. ஆதிநாதவல்லி மற்றும் குருகூர்வல்லி என நாச்சியார்கள் இருவர் தனித்தனி சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக் கிறார்கள். மணவாள மாமுனிகள் மற்றும் நம்மாழ்வாரின் மங்களாசாசனம் பெற்ற திருத்தலம் இது. மூலவரின் முன்புறமுள்ள கருட மண்டபத்தை மணவாள மாமுனிகளே கட்டினாராம். மூலவரின் கருவறை விமானத்தை விட நம்மாழ்வார் சன்னிதியின் விமானம் பெரியதாக அமைந்துள்ளது. அடியவர்களின் அன்புக்கு கட்டுப்பட்டவர் அல்லவா? ஆதிநாதப் பெருமாள். இங்குள்ள நம்மாழ்வாரின் விக்கிரகம் தாமிரபரணி தண்ணீரைக் காய்ச்சி அதில் ஆழ்வாரால் அவரது சக்தி பிரயோகிக்கப்பட்டு உருவானது என்று கூறப்படுகிறது. இத்தலத்தில் உள்ள மோகன வீணை என்னும் கல் நாதஸ்வரம் உலக அதிசயங்களுக்கு ஒப்பானது.
நின்ற கோலத்தில் – மூலவரான ஆதிநாதப் பெருமாள் கிழக்கு பார்த்தபடி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இவர் சுயம்புவாக தோன்றியவர். அவரின் பெரிய திருமேனியுடைய திருப்பாதங்கள் பூமிக்குள் இருப்பதாகக் கருதப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் அரங்கனுக்கு நடைபெறும் அரையர் சேவை இத்தல ஆதிநாதப் பெருமாளுக்கும் உண்டு. இத்தல தெற்கு மாடத் தெருவில் திருப்பதி ஏழுமலையானும் ஸ்ரீரங்கம் அரங்கநாதனும் தனிச் சன்னிதியில் எழுந்தருளியுள்ளனர். வடக்கு மாடத் தெருவில் ஆண்டாளுக்கும் தேசிகனுக்கும் சன்னிதிகள் அமைந்துள்ளன. காசிப முனிவரின் சாபத்தால் இழந்த தனது செல்வத்தை இந்திரன் இத்தல ஆதிநாதப் பெருமாளை வழிபட்டு மீண்டும் பெற்றான். பிரம்மாவுக்கு குருவாக இருந்து இத்தல ஆதிநாத பெருமாள் உபதேசம் செய்த காரணத்தால் இத்தலம் குருகூர் என்று அழைக்கப் படுவதாக கூறப்படுகிறது. குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். குரு பார்வை ஜாதகத்தில் வேண்டுவோர் இத்தல ஆதிநாதரை வழிபட்டால் நலம் உண்டாகும். ராமர், வேணுகோபாலன், நரசிம்மர், கருடன் மற்றும் ராமானுஜர் சன்னிதிகள் ஆலயத்தில் உள்ளன. குருகு என்ற பதத்திற்கு தமிழில் சங்கு என்று பொருள் கொள்ளலாம். இத்தல பெருமாள் சங்கன் என்னும் கடலில் வாழும் சங்குகளின் அரசன் வந்து வழிபட்ட பேறு பெற்றதால் குருகூர் என்று பெயர் வந்ததாகவும் ஒரு கூற்று நிலவுகிறது. நம்மாழ்வார் அவதாரத்திற்கு பிறகு இந்த ஊர் ஆழ்வார் திருநகரி என்றானது.
திருவிழா – இத்தலத்தில் கருட சேவை வைகாசி மாதத்தில் நடைபெறுகிறது. விஷக்கடியால் அவதிப்படுவோர் இங்குள்ள கருடாழ்வாருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட விஷக்கடிகள் அகலும் தோல் நோய்களும் நீங்கும். இத்தலத்தில் யானையும் வேடனும் போரிட்டு மடிய இத்தலத்தில் இறந்த ஒரே காரணத்திற்காக இருவரும் வைகுண்டம் சென்றனர். இவ்வாலயத்தில் வழிபட்டால் எமவாதனை இல்லை. பாவங்கள் பறந்தோடும். இங்கு வழிபட்டால் வைகுண்ட பதவி நிச்சயம். மேலும் இறந்து போன நம் முன்னோர்களுக்கு அமாவாசை நாள் மட்டுமின்றி இத்தலத்தில் எந்நாளும் திதி கொடுக்கலாம். அவ்வாறு செய்தால் நமது முன்னோர்களின் ஆன்மா நரகம் சென்றிருந்தாலும் நாம் இத்தலத்தில் திதி கொடுத்ததன் பலனாக விஷ்ணு தூதர்கள் அவர்களை வைகுண்டம் அழைத்துச் செல்வார்கள். திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரி மற்றும் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் தென்கிழக்காக 30 கிலோமீட்டர் தூரத்தில் தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது.